கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாதம் பத்தாம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மாவட்ட மருத்துவ துறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 காலப்பகுதியில் பத்துக் கர்ப்பவதிகள் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1இன்ப்ளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் காய்ச்சல் தொடங்கிய முதல்நாளிலேயே அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதால் தகுந்த சிகிச்சையினைப் பெற்றுக் குணமடைந்துள்ளனர்.
எனவே எந்தவொரு கர்ப்பவதிக்கோ அல்லது பிரசவித்த தாயாருக்கோ காய்ச்சல் ஏற்படின் உடனடியாக –காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நாளிலேயே- அவர் அருகில்உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
அத்துடன் பன்றிக் காய்ச்சல் தொற்றானது குறைவடையும் வரையில் கர்ப்பவதிகள் சனங்கள்கூடும், இடங்கள், கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பேரூந்துப் பயணங்கள், புகையிரதப்ப பயணங்கள், இந்தநோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல் என்பவற்றை தவிர்ப்பதால் இந்த நோய்தொற்றுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக வருகை தரும் பொது மக்களுக்கு உடனடியாக உதவும் வகையிலும் ஏனையவர்களுக்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையிலும் கா ய்ச்சல் நோயாளருக்கான விசேட வெளிநோயாளர் சேவைப்பிரிவானது இன்றிலிருந்து இயங்கவுள்ளது.
அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றயல் வைத்தியசாலைகளான முழங்காவில், வேரவில், பூனகரி, பளை, அக்கராயன்குளம் மற்றும் தருமபுரம் வைத்தியசாலைகளிலும் காய்ச்சல் தொட ர்பான இரத்தப் பரிசோதனைகளைச் செய்வதற்குரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டடுள்ளன.
எனவே காய்ச்சல் ஏற்படும் எவரும் தாமதிக்காது அருகில் உள்ள அரச வைத்தியசா லைகளுக்குச் சென்று உரிய வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கர்ப்பவதியோஅல்லது பிரசவத்தின் பின்னரான தாயாரோ காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலுள்ள அரச மருத்துவமனையை நாடவும்.
அங்கிருந்து மாவட்ட பொது மருத்துவமனைக்கு உங்களை பாதுகாப்பாகவும் உடனடியாகவும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு உங்களது குடும்பநல உத்தியோகத்தரையோ அல்லது பொதுச்சுகாதார பரிசோதகரையோ நாடவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.