ஹேவாஹெட்டை ரொக்வூட் தோட்டத்தின் லயன் குடியிருப்பு தொகுதி வீடொன்றில் மர்மமான முறையில் இளம் தாய் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு வீட்டினுள்ளேயே புதைக்கப்பட்டு கொங்கிறீட்டால் மூடப்பட்டிருந்த புதைகுழி ஒன்று நேற்று முன்தினம் தோண்டப்பட்டு சடலம் மீட்கப்பட்டது.
வலப்பனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.எல்.எம் விஜயசிங்க முன்னிலையில் ஹங்குரான்கெத்த பொலிஸார் மற்றும் நுவரெலியா மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி முதித்த குடாகமகே முன்னிலையிலேயே புதைகுழி தோண்டப்பட்டது.
இதன்போது குமார் சுமித்ரா (வயது 28) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார். சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தோட்டப் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளார். சம்பந்தப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்யும் நோக்குடன் வலைவிரித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் வெளிப்பிரதேசத்தில் தொழில் செய்து வரும் நிலையில் சம்பவ தினத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன் சகாக்களுடன் குறித்த தோட்ட குடியிருப்பு பகுதிக்கு வருகை தந்து தங்கியிருந்ததாகவும் பின்னர் தனது 3 வயது மகனை பாட்டியிடம் விட்டுவிட்டு தலைமறைவானதாகவும் கூறப்படுகின்றது.
சில நாட்களுக்கு பின்னர் குறித்த பெண்ணை காணாது சந்தேகம் கொண்ட உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் தோட்ட உத்தியோகஸ்தர்கள் அவசர பாதுகாப்பு பொலிஸ் பிரிவுக்கு வழங்கிய தகவல் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த லயன் குடியிருப்பை அண்டிய பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போது தடயப்பொருட்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
பூட்டப்பட்டிருந்த குடியிருப்பை சோதனையிட்டபோது மேலும் சந்தேகத்திற்கிடமான பல தகவல்கள் கிடைக்கப்பெறவே நேற்று முன்தினம் இரண்டு மணியளவில் வலப்பனை மாவட்ட நீதிவான் முன்னிலையில் குடியிருப்பின் புதிதாக சீமெந்து இடப்பட்டிருந்த பகுதி தோண்டப்பட்டது.
சுமார் 3 அடி ஆழமான குழியொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவரின் கணவர் ஏற்கனவே இரண்டு பெண்களை மணந்துள்ளார். முதலாவது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட சடலம் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் 3 வயது பிள்ளையை பெரிய தாயிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மேற்படி சம்பவம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.