யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 19 ஆம் 20 ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் பட்டமளிப்பு விழாக்குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம், பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன், கல்வி விவகாரங்கள் மற்றும் வெளியீட்டுக் கிளையின் உதவிப் பதிவாளர் எஸ்.கே. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாக்குழுத் தலைவர் பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளித்துள்ளார். அங்கு அவர் வழங்கிய ஊடக விபரிப்பில் குறிப்பிட்ட விடயங்கள் பின்வருமாறு,
பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடம், சேர் பொன் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்பப் பீடம், இந்துக் கற்கைகள் பீடம், சித்த மருத்துவ அலகு மற்றும் வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில் நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வழங்கப்படும் வெளிவாரிப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 162 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 1885 உள்வாரி மாணவர்களுக்கும், 166 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 65 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.