சிறிலங்கா சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கான தீர்மானத்தினை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த எஸ்.ஜே.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன “அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எமக்கு ஆதரவளித்து அவர்களுக்கு மனசாட்சி இருக்கின்றது என்பதை நிரூபிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.
“பிரேரணைக்கு ஆதரவைப் பெற மற்றைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னுரிமை
கடந்த சில நாட்களில் மருத்துவ அலட்சியத்தால் 7 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது, இது சுகாதாரத் துறையின் குறைபாடுகளாக கருதப்படுவதுடன் இது தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய இடத்தில் இருக்கும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இது தொடர்பில் விமர்சிக்கப்படுகின்றார்.
எனவே அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில் எஸ்.ஜே.பி அடுத்த வாரம் பிரேரணையை கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.