இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதும் தமிழர்கள் திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகள் மூலம் பௌத்த மேலாதிக்கவாதிகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தலைவர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (15.07.2023) 34 வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது அமைப்பினை உருவாக்கியவர்களில் ஒருவரும் அதன் முதலாவது தலைவருமான செயலதிபர் தோழர் க. உமாமகேஸ்வரன், இனப் பகைவர்களினால் படுகொலை செய்யப்பட்ட முப்பத்துநான்காவது நினைவுநாள். எமது அமைப்பினால் வருடந்தோறும் நினைவுகூரப்படும் உன்னதமான தியாகத்திற்குரிய நாள்.
தமிழ் மக்களது விடுதலைக்காக மட்டுமல்லாது இந்த நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்ட, தொடர்ந்து மறுக்கப்படுகின்ற சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடுதலைக்காகவும் தம்முயிரை ஆகுதியாக்கிக் கொண்ட அனைவரையும் உள்ளத்துள் வைத்து உணர்வால் போற்றுகின்ற நாள் ஆகும்.
இந்த தீவின் பூர்வீக குடிகளாக, நீண்ட காலமாக தம்மைத் தாமே ஆண்டு வந்த தமிழ்ச் சமூகம், நானூறு ஆண்டுகால அந்நியர் ஆதிக்கம் முடிவுக்கு வந்து இலங்கை சுதந்திரம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கவில்லை
இலங்கை சுதந்திரம் அடைந்துவிட்டதாக எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் மைய ஆட்சியில், சிங்கள தேசிய இனத்தால் ஏனைய தேசிய இனங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கவில்லை.
எண்ணிக்கையில் அதிகமான சிங்கள மக்களே சிறுபான்மையினரான ஏனைய இன மக்களின் வாழ்வியலை, தொடர்ச்சியான இருப்பை, இன அடிப்படையில் பாரபட்சமான முறையில் தீர்மானித்து வந்துள்ளார்கள்.
இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டம், வாக்குரிமை நீக்கம், மற்றும் தனிச் சிங்களச் சட்டம், தரப்படுத்தல் முறை போன்ற விடயங்கள் யாவும் தென்னிலங்கை அரசாங்கங்களின் இன ரீதியான உணர்வின் சாட்சிகளாகும்.
எமது வாழ்வியலை எமது வளங்களை நாமே நிர்வகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.