கிளிநொச்சி முழங்காவில் சிறிலங்கா கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் வவுனியாவில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைபப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யபப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு செல்லும் பேருந்து ஒன்றில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பொதி செய்யப்பட்ட நிலையில்
இதனையடுத்து குறித்த பேருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையின்போது ஐந்தாக பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், அதனை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பேருந்தில் பயணித்த கடற்படை சிப்பாயை காவல்துறையினர் கைது செய்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா,மற்றும் சந்தேகநபரான கடற்படை சிப்பாயை வவுனியா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அடுத்து வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு வவுனியா காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.