பாரிய கடன் சுமையை எதிர்நோக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்தவொரு முதலீட்டாளரும் முன்வரவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் வகையில் உலக வங்கியின் ஆதரவுடன் புதிய திட்டத்தை நிதியமைச்சு தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அரச வங்கிகள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு நூறு கோடி அமெரிக்க டொலர்கள் கடன்களை வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடன் தொகை
இதன்படி, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகை சுமார் முப்பது பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அறியப்படுகின்றது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் சுமார் 300 மேலாளர்கள் இருக்க வேண்டும் என்ற போதிலும், தற்போது சுமார் 600 மேலாளர்கள் உள்ளமையும் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிறுவனத்தில் 24 விமானங்கள் உள்ளதுடன், அந்த விமானங்கள் அனைத்தும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
அதன்படி , சுமார் ஆறு விமானங்கள் உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரங்கள் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், விமானங்களின் எண்ணிக்கை 18 ஆகவும் காணப்படுகின்றது.
மேலும், கடந்த கொரோனா காலத்தில் விமான நிறுவன ஊழியர்களைக் குறைப்பதற்காக தன்னார்வ ஓய்வு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அத்தியாவசியப் பணியாளர்கள் குழு மட்டுமே ஓய்வு பெற்றுள்ளதாகவும், நீக்க வேண்டிய ஊழியர்கள் வெளியேறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.