புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் முதல் இன்னிங்சில் 27 ரன்னும், 2-வது இன்னிங்சில் 109 ரன்களும் குவித்தார். இதனால் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இதுவரை பெறாத 939 புள்ளிகள் பெற்று அதிஉச்சத்தில் உள்ளார். இதற்கு முன் டான் பிராட்மேன் (961), லென் ஹட்டன் (945), ஜேக் ஹோப்ஸ் மற்றும் ரிக்கி பாண்டிங் (942), பீட்டர் மே (941), கேரி சோபர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் குமார் சங்ககரா (938) ஆகியோர் 900 புள்ளிகளை கடந்து சாதனைப் படைத்துள்ளனர்.
விராட் கோலி 873 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் 848 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 823 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சுக்கான தரவரிசையில் அஸ்வின் 878 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். ஜடேஜா மற்றும் ஹசில்வுட் ஆகியோர் 860 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.
புனே டெஸ்டில் முதல் இன்னிங்சில் 64 ரன்னும், 2-வது இன்னிங்சில் 10 ரன்னும் சேர்த்த லோகேஷ் ராகுல் 46-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 12 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஓ’கீபே 33 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தைப் பிடித்துள்ளார்.