பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கம் மீதான அதிருப்திகளைக் கொட்டித் தீர்த்திருந்தார்.
முன்னைய அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும், தம்மை நடத்துவதாக, தமிழ் மக்கள் உணர்கிறார்கள் என்றும், எமது மக்கள் இந்த அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற முறையானது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அரசியலமைப்பு மாற்றம், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற்போனோர் பிரச்சினை, காணிகள் விடுவிப்பு, போர்க்குற்ற விசாரணை என்பன போன்றவற்றை, தற்போதைய அரசாங்கம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய விடயங்களாகவே தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.
இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே முக்கியத்துவம் அளிப்பதை தவிர்த்து வந்திருக்கிறது,
பாராளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி 100 நாள் செயற்திட்டத்துக்குள் இந்த விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.
அதற்குப் பின்னரும், தமிழ் மக்களின் இத்தகைய பிரச்சினைகளில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தத் தவறியிருக்கிறது.
இதனால், தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரித்து இப்போது தொடர் போராட்டங்களை நடத்துகின்ற அளவுக்கு இந்த அதிருப்தி அலை மாற்றமடைந்திருக்கிறது.
இந்தக் கட்டத்தில், அரசாங்கம் மாத்திரமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
அரசியலமைப்பு மாற்றம், போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட விவகாரங்களில் அரசாங்கம் மெதுவாகவே முன்னகர முனைகிறது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் கடுமையான பிரசாரங்கள் அரசாங்கத்தை திணறடிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
இந்த விடயங்களில் அரசாங்கம் எந்த நகர்வை மேற்கொண்டாலும், அதனை தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவோ, நாட்டின் இறைமைக்கான அச்சுறுத்தலாகவோ பிரசாரப்படுத்துவதில் கூட்டு எதிரணி கவனம் செலுத்துகிறது.
குற்றச்சாட்டுகளின் பேரில் இராணுவத்தினரை கைது செய்தால், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.
போர் வீரர்களைப் பழிவாங்குகிறது என்ற குரல்கள் எழுப்பப்படுகின்றன.அரசியலமைப்பு மாற்றத்தில் அதிகாரப்பகிர்வு பற்றிப் பேசத் தொடங்கியதும், நாட்டைப் பிரிக்க சதி என்றும், சமஷ்டி மூலம் நாடு பிரியப் போகிறது என்றும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போதைய அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் எட்ட விடாமல், மஹிந்த ராஜபக்ஷ அணியினர் செய்யும் பிரசாரங்கள், சிங்கள மக்கள் மத்தியில் எடுபடவே செய்கிறது.
இன்னும் சில மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை அடுத்தடுத்து சந்திக்கவுள்ள அரசாங்கத்துக்கு கூட்டு எதிரணியின் பிரசாரங்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றன.
சிங்கள மக்கள் தம்மை நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருக்கிறது.
அதனால், தமிழர்கள் கேட்கின்ற அனைத்தையும் கொடுக்கின்ற அரசாங்கமாக இது இல்லை என்று காட்ட முயற்சிக்கப்படுகிறது.
அரசாங்கத்தினால், தமிழ் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் எதையும் வெளிப்படையாகப் பேசவோ, செய்யவோ முடியாத நிலை காணப்படுகிறது.
சிங்கள மக்களிடம் எதிர்ப்புணர்வு தோன்றாமல் நாசூக்காக நடந்து கொள்ளவே அரசாங்கம் விரும்புகிறது.
அரசியலமைப்பு மாற்றம், போர்க்குற்ற விசாரணை போன்ற விடயங்களில், அரசாங்கத்தின் செயற்பாடுகள், மிக மிக மந்தமாகவே உள்ளன.
இந்த விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் வேகம் போதாது என்ற கருத்து சர்வதேச அளவில் காணப்பட்டாலும், சிங்கள மக்களின் வெறுப்புணர்வைக் கருத்தில் கொண்டு மெதுவாகவே நகர முனைகிறது.
அதேவேளை, அரசாங்கத்தின் இந்த மந்தமான நகர்வு தமிழ் மக்களுக்கு எரிச்சலையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தை தொடர்ந்து அதிகரிக்கச் செய்து வருகிறது.
அதனால் தான், இதற்கு முந்திய அரசாங்கங்களைப் போலவே, இந்த அரசாங்கமும் தம்மை நடத்துவதாக தமிழ் மக்கள் அதிருப்தியடைந்திருக்கின்றனர் என்ற கருத்தை இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
இலங்கையில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும், காலத்துக்குக் காலம் தமிழ் மக்களை இன்னலுக்குட்படுத்தி வந்திருக்கின்றது.
உரிமைகள் பறிப்பு, இனப்படுகொலைகள், இடம்பெயர்வுகள், போர் நடவடிக்கைகள் என்பனவற்றுக்குக் காரணமாக இருந்த அரசாங்கங்கள் மீது தமிழ் மக்கள் வெறுப்படைந்திருந்தனர்.
குறிப்பாக, ஜே.ஆர்.ஜயவர்த்தன, பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா குமாரணதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலங்களில் தமிழ் மக்கள் பெரும் சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்தனர்.
இந்த அரசாங்கங்களைத் தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் தமது நேரடியான பங்களிப்பை வழங்கியிருக்கவில்லை.
ஆனால், தற்போதைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் தெரிவில் தமிழ் மக்கள் கூடுதல் நம்பிக்கையை வைத்து வாக்களித்திருந்தனர்.
தமிழ் மக்களின் அதிகபட்ச வாக்குகளால் தான் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால் இன்று எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போன நிலையில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
சிங்கள மக்களின் எதிர்ப்பைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக, தமிழ் மக்களின் வெறுப்பை அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
பெரும்பான்மைச் சிங்களவர்களின் ஆதரவு அரசாங்கத்துக்குத் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.
அதற்காக, சிங்களவர்களை அதிருப்திக்குள்ளாக்கக் கூடாது என்பதற்கான அரசாங்கம் அதிகபட்ச பொறுமையைக் கடைப்பிடிப்பதும், தமிழர்களின் அதிக பட்ச பொறுமை சோதனைக்குள்ளாக்கப்படுவதும் நியாயமற்றது.
இந்தக் கட்டத்தில் தான் அரசாங்கம் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது,இந்தநிலை அரசாங்கத்துக்கு மாத்திரம் ஏற்படவில்லை.
இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற போதிலும் தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற திராணியற்றதாக இருக்கிறது என்ற காட்டமான விமர்சனமும், அதிருப்தியும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அண்மையில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள், அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கூட, எதிரானவை தான்.
ஆட்சியை மாற்றுகின்ற அதிகாரம் படைத்தவர்களாக இருந்த கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத கையறு நிலையிலா இருக்கிறது என்ற கேள்வி தமிழ் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
தேசிய நல்லிணக்கத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகபட்ச பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கடைப்பிடிக்க முனைந்ததன் ஒரு விளைவாகக் கூட இது இருக்கலாம்.
தொடர்ச்சியாக, முரண் அரசியல் செய்து வந்த கூட்டமைப்பு, தமது வழக்கமான பாதையில் இருந்து சற்று விலகத் தொடங்கியதுமே, கடுமையான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுவதற்கு சிங்கள மக்களின் முழுமையான ஆதரவு அவசியம் என்பதால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகம் அடக்கி வாசிக்கிறது.
இதனை சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் பலதடவைகள் எடுத்துக் கூறியுள்ளனர்.
குறிப்பாக, சமஷ்டி பற்றிய நிலைப்பாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்த தயங்குகின்றமை, இதில் முக்கியமானது.
சமஷ்டி என்றாலே பிரிவினை தான் என்று சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற கருத்தை உடைக்க முனையாமல், சமஷ்டி பற்றிய பேசாமல் தவிர்க்கும் உத்தியை சம்பந்தன் கையாளுகிறார்.
இது சம்பந்தன் சமஷ்டியைக் கைவிட்டு ஒற்றையாட்சித் தீர்வுக்குத் தயாராகிறார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
போர்க்குற்ற விசாரணை விவகாரத்திலும், ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதும் போர்க்குற்றம் சுமத்தவில்லை என்றும், தவறிழைத்த சில படையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் என்றும் சம்பந்தன் சமாளிக்க முயன்றிருக்கிறார்.
திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக கூறி வந்த குற்றச்சாட்டை, சம்பந்தனின் இந்தக் கருத்து உடைக்கும் வகையில் இருக்கிறது.
ஒட்டுமொத்த அரசபடைகளையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் கருதியிருக்கலாம்.
ஆனால், போரின் போது, இராணுவம் எவ்வாறு நடந்து கொண்டது என்பதை அறிந்த தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், சம்பந்தனின் இந்தக் கருத்து நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
புதிய அரசியலமைப்புக்கு சிங்கள மக்களின் ஆதரவு அவசியம் என்பதால், சமஷ்டி பற்றிப் பேசாமலும், இராணுவத்தினர் குழப்பி விடக் கூடாது என்பதற்காக, ஒட்டுமொத்த இராணுவம் மீதும் போர்க்குற்றம் சுமத்தாமலும், இருந்து விடப் பார்க்கிறார் சம்பந்தன்.
இதன் விளைவு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான நம்பகத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் கவனிக்கத் தவறியிருக்கிறார்.
சிங்கள மக்களிடம் அரசாங்கமும், தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவநம்பிக்கைகளைச் சம்பாதிக்கத் தொடங்கியுள்ள நிலையானது, நல்லிணக்கம் பற்றிய சந்தேகங்களை வலுப்படுத்துகிறது.
இரண்டு தரப்பு மக்களுக்கும் இடையில் உள்ள புரிதலின்மையையும், இடைவெளியையும் தான் இது காட்டுகிறது. இந்தக் கிணறைத் தாண்டுவது ஒன்றும் சுலபமானதல்ல.
தமிழ் மக்களுக்கான உரிமைகளை அரசாங்கமும் சிங்கள மக்களும் விட்டுக்கொடுக்க முன்வராத வரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுமை வீணானதாகவே இருக்கும்.
கூட்டமைப்பின் இந்த அசாதாரண பொறுமையை, தமிழ் மக்கள் அதன் பலவீனமாக எடை போடும் நிலை ஏற்பட்டால், அண்ணனிடம் இருந்து திண்ணையைக் கைப்பற்றத் தயாராக இருக்கும் தரப்புகளுக்குத் தான் வாய்ப்பாக அமையும்.