ஜனநாயகத்தை அழிக்க இந்த அரசாங்கம் எடுக்கும் கூட்டுச் சதி முயற்சிகள் சகலதையும் முறியடிக்க நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இன்று விடுத்துள்ள விசேட காணொலியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உண்மையில், இந்த அரசாங்கம் அதன் நடவடிக்கைகளின் மூலம் மக்களின் இறையாண்மை சர்வஜன வாக்குரிமை என்பன மக்களுக்கு மறுக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் என்ற தொனிப்பொருளில் அரசாங்கம், நீதிமன்றத்திற்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை எதிர்ப்போம்.
அத்துடன், நீதித்துறையின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க இடமளிக்க மாட்டோம். சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் ஆணைக்குழு மீது செல்வாக்கு செலுத்த இடமளிக்க மாட்டோம்.
எதிர்க்கட்சியின் சகல தரப்புகளையும் ஒன்றாய் இணைத்துக் கொண்டு 220 இலட்சம் மக்களின் நலனுக்காக நீதித்துறையின் சுதந்திரத்தையும் தேர்தல் ஆணைக்குழுவின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தை வலுப்படுத்த செயற்படுவோம்.
ஜனநாயகத்தை அழிக்க இந்த அரசாங்கம் எடுக்கும் கூட்டுச்சதி முயற்சிகள் சகலத்தையும் முறியடிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.