இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர மோசடி தொடர்புடையது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளதாக கூறப்படும் வர்த்தமானி அறிவித்தல், மோசடியாளர்கள் தயாரித்த போலி ஆவணம் என்பது தெளிவாகியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.
புற கோட்டையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசடி சம்பவம் மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர மோசடி சம்பவமாகும்.
இது தொடர்பான கொடுக்கல் வாங்கலுக்கு, முன்னாள் ஜனாதிபதியும் அன்றைய நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி வர்த்தமானியை வெளியிட்டு ஆலோசனை வழங்கியதாக காட்டும், போலி ஆவணத்தை வெளியிட்டு மோசடியாளர்கள் சதித்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.
மோசடி சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் 2015 ஆம் ஆண்டு நடந்த பிணை முறிப்பத்திரங்கள் தொடர்பான சகல விடயங்களும், அவற்றுக்கான வட்டி வீதங்கள் தொடர்பான விடயங்களும் அடங்குகின்றன.
இதனடிப்படையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
இப்படியான போலி ஆவணத்தை சமர்பித்தால், பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான விசாரணைகளை தவறாக வழி நடத்திச் செல்ல முடியும் என்பதுடன் காலம் தாழ்த்த முடியும். இதனையே பிணை முறிப்பத்திர திருடர்கள் செய்துள்ளனர்.
இதனால், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை நிறுத்தாது அதனை துரிதமாக முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அத்துடன் இந்த போலி ஆவணம் குறித்து தனியான விசாரணைகளை நடத்துமாறும் ஜனாதிபதியிடம் கோருகிறோம். அப்படி நடக்காவிட்டால் சதித்திட்டகார்களின் தேவை மாத்திரமே நிறைவேறும்.
இதற்கு முன்னர் போலி ஆவணம் தயாரித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டார்.
அப்படியானால், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள போலி ஆவணம் சம்பந்தமாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டாமா?. நிதியமைச்சரும் பதவி விலக வேண்டாமா?.
இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அமைதி காத்து வருகிறது. இதன் மூலம் இதில் உள்ள அவர்களின் தொடர்பு தெளிவாகியுள்ளது. மக்கள் இது பற்றி விளங்கி கொள்ள வேண்டும். மேலும் போலி ஆவணத்தை தயாரித்தவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் முஸ்ஸமில் கூறியுள்ளார்.
அதேவேளை இராணுவப் புலனாய்வுப் படைப் பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் உட்பட 5 அதிகாரிகள் ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கீத் நொயார் தாக்கப்பட்ட தினத்தில் நுகேகொடை பிரதேசத்தில் உள்ள தொலைபேசி கோபுரங்களுக்கு அருகில் இந்த அதிகாரிகளின் தொலைபேசிகள் இயங்கியதன் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடையாள அணி வகுப்புக்கு உள்ளாக்கப்பட உள்ள அதிகாரிகள் என்ற போதிலும் முதல் முறையாக நீதிமன்றத்திற்கு ஆஜர்ப்படுத்தப்பட்ட போது முகங்களை மூடாமல் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்த அதிகாரிகளின் புகைப்படங்கள் ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளில்(கமரா) பதிவாகியுள்ளன.
நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது மாத்திரம் அவர்களின் முகங்கள் மூடப்பட்டிருந்தன.
கீத் நொயார் மாத்திரமல்ல ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் இந்த அதிகாரிகளை அடையாளம் காண முடியும். தற்போது அடையாள அணி வகுப்பு நடத்தி பயன் இருக்குமா?.
இப்படியான செயல்கள் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதை காண முடிவதாகவும் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.