கேரளாவை சேர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும், சந்தோஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற மார்ச் 29-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த வைக்கம் விஜயலட்சுமி தனது திருமணம் நின்றுபோனதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, திருமணத்திற்கு பிறகு தனது இசை பயணத்தை தொடரவேண்டாம் என்று சந்தோஷ் கூறினார். பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராக பணியாற்றுமாறும் கூறுகிறார். முதலில் எனக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருப்பதாக சொன்ன சந்தோஷ் தற்போது எனது லட்சியத்துக்கே தடை போடுகிறார்.
நிச்சயதார்த்தத்தின்போது சந்தோஷ் என்னுடைய வீட்டில் என்னுடன் வாழ்வதாக சொன்னார். ஆனால், இப்போதோ அவருடைய உறவினர்கள் வீட்டில்தான் வாழவேண்டும் என்று கூறுகிறார். ஆகையால், இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. திருச்சூரில் எங்களுடைய திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போது இந்த திருமணம் நிறுத்தப்பட்டு விட்டது. இது முற்றிலும் நான் எடுத்த முடிவு. என்னை யாரும் எதற்காகவும் கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமியின் இந்த முடிவு திரையுலகிலும், சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது காந்த குரலால் அனைவர் மனதையும் ஆட்கொண்ட வைக்கம் விஜயலட்சுமி கண்பார்வை அற்றவராக இருந்தாலும், சாதிப்பதற்கு ஊனம் தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியவர்.
இத்தனை திறமையும், கலை ஆர்வமும் கொண்ட விஜயலட்சுமிக்கு தக்க துணை கிடைத்துவிட்டதாய் அனைவரும் மகிழ்ந்திருந்த இந்த தருணத்தில் அவருடைய அந்த அறிவிப்பு கண்டிப்பாக அனைவருக்கும் சோகத்தைத்தான் கொடுக்கும்.