இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும். ரேமன் ரெய்பர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி முடிவைடைந்தது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.
அந்த போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட குழுவை வெஸ்ட் இண்டீஸ் இன்று அறிவித்து உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரேமன் ரெய்பர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளார். அவர் 3-வது வரிசையில் பேட்டிங் செய்து 2 மற்றும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக் குழு, புதுமுக வீரர் ஆல்-ரவுண்டர் கெவின் சின்க்ளேரை 2-வது டெஸ்ட்டிற்கு தேர்வு செய்து உள்ளது. கெவின் சின்க்ளேருக்கு இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் ஆகும். 2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:- கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜெர்மைன் பிளாக்வுட், டேகனரைன் சந்தர்பால், ரக்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சியர், கெமர் ரோச்,கெவின் சின்க்ளேர் மற்றும் ஜோமல் வாரிக்கன்.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.