மட்டக்களப்பில் இரா.சாணக்கியன் எம்.பியை தாக்க முற்பட்ட இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில், 3 பேரை கைது செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (18.07.2023) முன்னெடுக்கப்பட்டதாக மட்டு. பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பத்தில் தொடர்புடைய 10 க்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் தலைமறைவாகியுள்ளதாவும் கூறியுள்ளனர்.
போக்குவரத்து அனுமதியில் ஊழல்
சம்பவ தினமான நேற்று (17.07.2023) மட்டு தனியார் பேருந்து தரிப்பு நிலையத்தில் அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பேருந்துகளைத் தடுக்குமாறு எதிர்ப்பு தெரிவித்து தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர், சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் சாணக்கியன் எம்.பி கலந்து கொண்டார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி, போக்குவரத்து அனுமதியில் ஊழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் அரசியல்கட்சி ஒன்று இருப்பதாகத் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு இருவர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அந்த இருவரையும் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளதுடன் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதில் சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான இருவரும் செய்த முறைப்பாட்டிற்கமைய அவர்களைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை இன்று கைது செய்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட ஏனையோர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.