நிறைவேற்று ஜனாதிபதியால் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவது நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான அதிகாரமாகும், எனவே அதனை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவின் கீழ் சவால் செய்ய முடியாது என்று துணை மன்றாடியார் நாயகம் நெரின் புல்லே உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ரோயல் பார்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பெண்கள் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை நேற்று(18.07.2023) எடுத்துக்கொள்ளப்பட்ட போது நெரின் புள்ளே இதனை வலியுறுத்தினார்.
குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு
விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு உதவிய பிரதி மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முழு அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கு உள்ளது என்று சமர்ப்பித்தார்.
இந்த அதிகாரம் நாட்டின் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது நீதித்துறையில் ஜனாதிபதியின் தேவையற்ற தலையீடு அல்ல என்றும், ஜனாதிபதி இந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விசேட அதிகாரமானது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஏனைய நிறைவேற்று அதிகாரங்களிலிருந்து வேறுபட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெரின் புல்லேவின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த மூன்று நீதியரசர்கள் அமர்வு விசாரணையை ஒத்திவைத்தது.