2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுழற்பந்து வீரர் சின்கிளேர் சேர்க்கப்பட்டு உள்ளார். பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் டொமினிகாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை (20-ந் தேதி ) தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. முதல் டெஸ்டில் 3 தினத்திலேயே இந்திய அணி வெஸ்ட் இண்டீசை சுருட்டி வீசி இருந்தது. இந்தியாவின் ஆதிக்கம் இந்த டெஸ்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலவீனமான வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்தியா சாதித்தது. ஜெய்ஷ்வாலின் பேட்டிங்கும், அஸ்வினின் பந்துவீச்சும் அபாரமான வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஜெய்ஷ்வால் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார். அவர் அறிமுக டெஸ்டிலேயே 171 ரன் குவித்து சாதனை புரிந்தார். இதேபோல கேப்டன் ரோகித் சர்மா (103 ரன்), விராட் கோலி ஆகியோரும் பேட்டிங்கில் சாதித்தனர். அஸ்வின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். அவர் 12 விக்கெட்களை வீழ்த்தி (முதல் இன்னிங்ஸ் 5+ இரண்டாவது இன்னிங்ஸ் 7) முத்திரை பதித்தார். வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அஸ்வின் 2-வது டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதேபோல ஜடேஜாவும் சிறப்பான நிலையில் உள்ளார்.
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. ஒருவேளை வேகப்பந்து வீரர் ஜெய்தேவ் உனட்கட் நீக்கப்பட்டால் நவ்தீப் சைனி அல்லது புதுமுக வீரர் முகேஷ் குமார் இடம் பெறலாம். பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும். இதனால் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டும். அந்த அணி 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியை டெஸ்டில் வீழ்த்தியது கிடையாது. 2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுழற்பந்து வீரர் சின்கிளேர் சேர்க்கப்பட்டு உள்ளார். ஆல் ரவுண்டர் ரேமேன் ரீபெர் நீக்கப்பட்டுள்ளார். நாளை டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.