பாகிஸ்தானுக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது, நோமன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் 16-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 95.2 ஓவர்களில் 312 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 101 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு சாத் ஷகீலும், ஆஹா சல்மானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 121.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 461 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சாத் ஷகீல் 208 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதையடுத்து 149 ரன்கள் பின்னிலையுடன் இலங்கை அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
தனஞ்செயா மற்றும் மெண்டீஸ், நிசான் ஆகியோரின் ஆட்டத்தால் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது, நோமன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.