நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று இன்றுடன் (20.07.2023) ஒரு வருடம் பூர்த்தியாகிறது.
தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு எந்தவித விழாக்களையும் ஏற்பாடு செய்ய வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எரிவாயு வரிசை, எரிபொருள் வரிசை உள்ளிட்ட நாடு அராஜகமான நிலைமையில் காணப்பட்ட வேளையிலேயே அவர் நாட்டைப் பொறுப்பேற்றார்.
தற்போது நாடு இயல்பு நிலைக்கு வந்துள்ளதால் ஆண்டு நிறைவு விழாவை ஏற்பாடு செய்ய வேண்டுமென பலத்தரப்பினரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
8வது நிறைவேற்று ஜனாதிபதி
எனினும்,பொது மக்களின் பணத்தையோ தனியார் பணத்தையோ செலவு செய்து ஆண்டு நிறைவு விழாவை நடத்த வேண்டாமென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பதவியேற்ற தினத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, 1981 இலக்கம் 02 எனும் ஜனாதிபதியை தெரிவு செய்யும் (விசேட ஏற்பாடு) சட்டத்தின் கீழ் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாக்களிப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவுக்கு 83 வாக்குகளும் அனுரகுமார திசாநாயக்கவுக்கு 03 வாக்குகளும் கிடைத்தன.
மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து ராஜினாமா
அதன்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவையடுத்து இடைவெளியான பதவியின் எஞ்சிய காலத்திற்கு பதவி வகிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க தகுதி பெற்றார்.
ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக 2021, ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23 ஆம் திகதி ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
2022 ஆம் ஆண்டு மே (09) அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து ராஜினாமா செய்ததன் பின்னர், அப்பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவோ அல்லது வேறு எவரும் முன்வராத வேளையில் ரணில் விக்ரமசிங்க அந்த சவாலை ஏற்றார்.
அவ் வேளையில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு இலங்கை மக்களுக்கு சேவை புரிவதற்கு உறுதிமொழி வழங்கிய அவர், 2022 மே 12இல், பிரதமராக பொறுப்பேற்றார்.
அதே வருடம் ஜூலை.14 ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச பதவியை ராஜினாமா செய்ததோடு பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பின்படி ஜூலை.15 ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் காணப்பட்ட பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட திட்டங்களுக்கு, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளின் ஒத்துழைப்புக்களும் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.