ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
நான் பாதுகாப்புச் செயலராக இருந்த போது, கொழும்பில் விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காக, புலனாய்வு அதிகாரிகளுடன் கிரமமான சந்திப்புகளை நடத்துவது வழக்கம்.
போர் நடந்த காலகட்டத்தில், புலனாய்வு அதிகாரிகளுடன் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கூட்டங்களை நடத்துவேன்.
இந்தக் கூட்டங்களின் மூலம், வெற்றிகரமாக விடுதலைப் புலிகளின் இரகசிய செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு, கொழும்பில் சில தாக்குதல்களையும் தடுக்க முடிந்தது.
பாதுகாப்புச் செயலராக பணியாற்றிய போது, இராணுவ அதிகாரிகளுக்கு அவர்களின் கடமைகளுக்கு அப்பால் செயற்படுவதற்கான உத்தரவுகளை இடும் அதிகாரம் எனக்கு இருக்கவில்லை.
யாரோ செய்த குற்றங்களை சுமத்துவது நியாயமற்றது. உண்மையான குற்றவாளிகளை அதிகாரிகள் கைது செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.