கிழக்கு உக்ரைனில் உள்ள ட்ருஷ்கிவ்கா நகரின் மீது ரஷ்யா நடத்திய கிளஸ்டர் வெடிகுண்டு தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக அந்நகரின் இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிளஸ்டர் வெடிகுண்டு தாக்குதல்
முதற்கட்ட தரவுகளின்படி, குடியிருப்பு கட்டடத்தில் கொத்து குண்டுகள் தாக்கியதில் இரண்டு குடியிருப்பாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சுமார் 12 தனியார் துறை வீடுகள் சேதமடைந்ததாக ட்ருஷ்கிவ்கா இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைனிய சேவை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றவர்கள் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் தாக்குதல்
இதேவேளை ரஷ்ய எல்லை கிராமங்களில் உக்ரைன் கிளஸ்டர் குண்டுகளை வீசியதாக ரஷ்ய கவர்னர் கூறியுள்ளார்.
மேற்கு பெல்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய எல்லை கிராமமான ஷுரவ்லெவ்கா மீது உக்ரைன் கிளஸ்டர் வெடிகுண்டை வெள்ளிக்கிழமை வீசியதாக பெல்கோரோட் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
“பெல்கோரோட் பகுதியில், உக்ரைனிய படைகள் 21 பீரங்கி குண்டுகள் மற்றும் மூன்று கிளஸ்டர் வெடிமருந்துகளை பல ராக்கெட் லாஞ்சர்களில் இருந்து ஷுரவ்லெவ்கா கிராமத்தில் சுட்டன” என்று அவர் Telegram சேனல் ஒன்றில் கூறியுள்ளார்.
ஆதாரங்கள் எதையும் வெளியிடாத அவர், ஆனால் உயிரிழப்பு அல்லது சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.
உக்ரைனிய அதிகாரிகளிடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்
உக்ரைன் இந்த மாதம் அமெரிக்காவிடமிருந்து கிளஸ்டர் குண்டுகளைப் பெற்றது, ஆனால் எதிரி வீரர்கள் ஊடுருவலை தடுக்க மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.
இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் எதிரி நாடுகள் மீது கிளஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
இருப்பினும் இரு நாடுகளும் கிளஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.