தென்னிலங்கை உலகின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசையைக் கொண்ட பிரதேசமாகவும், தெற்குப் பெருங்கடல் விண்கலங்கள் தரையிறங்குவதற்கு மிகவும் பொருத்தமான பிரதேசமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது, எனவே சீனாவும், இலங்கையும் விண்வெளி அறிவியலில் ஒத்துழைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் சீன உயர்மட்டக் குழுவுடன் நேற்று (22.07.2023) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்திய அரசியல் குழு உறுப்பினரும், சோங்கிங் சிபிசி மாநகரக் குழுச் செயலாளருமான யுவான் ஜியாஜூன் தலைமையிலான குழுவினர் நேற்று அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்தனர்.
விண்வெளி அறிவியலில் ஒத்துழைக்க முடியும்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கலாநிதி யுவான் ஜியாஜுங் ஒரு சிறந்த விஞ்ஞானி என்று குறிப்பிட்ட பிரதமர், தென்னிலங்கை உலகிலேயே மிகக் குறைந்த ஈர்ப்பு விசையைக் கொண்ட பகுதியாகவும், தெற்குப் பெருங்கடல் விண்கலங்கள் தரையிறங்குவதற்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதால் இரு நாடுகளும் விண்வெளி அறிவியலில் ஒத்துழைக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
இந்த நேரத்தில் தனது கடனை மறுசீரமைப்பதற்கும் எதிர்காலத்தில் அதன் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் சீனாவின் ஆதரவை இலங்கை எதிர்நோக்குவதாக கூறியுள்ளார்.
கலப்பின அரிசி மற்றும் பிற உணவுப் பயிர்களைப் பயன்படுத்தி, உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க, வறுமையை ஒழித்து, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்த சோங்கிங்கின் அனுபவத்தைப், பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர், தூதுக்குழுவிடம் கேட்டுக் கொண்டார்.