ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குரிய மாதம் தான். ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாகவே ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குரிய மாதம் தான். ஆடி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அம்மனும் அம்மனுக்கு ஊற்றும் கூழ், வேப்பிலை ஆகியவைதான். இந்த ஆடி மாத ஞாயிற்றுக் கிழமையில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி, கூழை ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுப்பார்கள். ஆடி மாதம் வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா எல்லா கோவில்களிலும், வீடுகளிலும் பெரும்பாலும் விமரிசையாக நடத்தப்படும்.
ஆடி மாதம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடிய தானமானது கோடி புண்ணியத்தை கொடுக்கக் கூடியது ஆகும். இந்த நாளில் தான் கூழ் வார்த்து பக்தர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் நாம் பூஜை செய்து தானம் செய்கிறோம். முருங்கைக் கீரை, வாழைக்காய், காராமணி, கருவாடு, கொழுக்கட்டை, கத்திரிக்காய், மொச்சை, கேழ்வரகு கூழ், மாவிளக்கு ஆகியவை கொண்டு பதார்த்தங்கள் தயாரித்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜை செய்து ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் தானம் கொடுப்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு முக்கிய விசேஷமாக இருக்கிறது. இதில் தானம் கொடுப்பவர்களுக்கும், தானம் வாங்குபவர்களுக்கும் பெரும் புண்ணியம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
அன்னதானம் செய்வது என்பது ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையின் முக்கிய அம்சமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் நீங்கள் செய்யும் சிறு தானமும் மிகப்பெரிய பலன்களை கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது. நீங்கள் உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்தால் இந்நாளில் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் பெரும் நன்மை உண்டாகும். ஆடி ஞாயிறு என்றால் அது கன்னி தெய்வத்தை வழிபட கூடிய நாள் என்று சொல்லப்பட்டுள்ளது. நிறைய பேர் வீடுகளில் இந்த வழக்கம் பாரம்பரியமாகவே இருக்கும். ஆடி மாதம் வரக்கூடிய ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில், அந்த வீட்டினுடைய கன்னி தெய்வத்தை மனதார நினைத்து பூஜை செய்வார்கள்.
ஒரு குடும்பம் அடுத்தடுத்த தலைமுறைகளை எடுத்து, வாழையடி வாழையாக தழைத்து வாழ வேண்டுமென்றால் அந்த குடும்பத்திற்கு இந்த கன்னி தெய்வத்தின் ஆசிர்வாதம் மிக மிக முக்கியம். ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னி பூஜையை மனநிறைவோடு செய்து உங்கள் வீட்டு கன்னி தெய்வத்தை வேண்டிக் கொண்டால், உங்கள் குடும்பம் சுபிட்சம் அடையும். உங்கள் வீட்டில் யாருக்காவது திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் திருமணம் கைகூடி வரும். யாருக்கேனும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உங்கள் குலம் வாழையடி வாழையாக தழைத்தோங்கும். உங்கள் வீட்டில் இருக்கும் தீராத கஷ்டங்கள் சீக்கிரமே தீரத் தொடங்கும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து குறைகளை தீர்த்து வைக்கும் தெய்வம்தான் கன்னி தெய்வம்.