அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்றையதினம்(25.07.2023) இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் மூன்றாவதாக மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தேர்தல் திட்டம்
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நேற்று மாலை 6 மணிமுதல் 45 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பில் பல தரப்பட்ட விடயங்களும் பேசப்பட்ட நிலையில், தனது தேர்தல் திட்டம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தான் ரணில் திட்டமிடுகின்றார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.