ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கல்வியமைச்சின் விசேட நாடாளுமன்ற குழுவில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பதிவு செய்ய புதிய கணக்கெடுப்பை நடத்த கல்வியமைச்சு விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நாடாளுமன்ற குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்சவினால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பற்றாக்குறை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2023, நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், (2022) ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றமை திருத்தப்பணிகளுக்கு மேலும் இடையூறாக உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான விடைத்தாள் மதிப்பீடு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் சில அதிபர்கள் ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிகளுக்கு அனுமதிக்காமை சிக்கலாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.