ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள சர்வ கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன தீர்மானித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜே.வி.பி. என்பன புறக்கணிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.
குறித்த சர்வ கட்சிக் கூட்டம் நாளைய தினம் (26.07.2023) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. கூறியதாவது, “ஜனாதிபதி சந்திக்க விரும்புகின்றார். நாங்கள் நிச்சயம் கலந்துகொள்வோம்” என தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கின்றது என்பது தெரியும்
புளொட் அமைப்பின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவருமான த.சித்தார்த்தன் எம்.பி. கூறியதாவது, “இன நல்லிணக்கம் தொடர்பாகப் பேசுவதற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவே ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது வெறுமனே வாய் பேச்சில் மாத்திரம் இருக்க முடியாது.
இந்தியாவிலிருந்து வந்தவுடன் இதனைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. அங்கு வலியுறுத்தப்பட்டதால் அவர் இதனைப் பற்றி பேசுகின்றார்.
கூட்டத்தில் பங்கேற்றால்தான் என்ன நடக்கின்றது என்பது தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. கருத்துரைக்கையில், “இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முதல் இரு இனத்தையும் சமமாக நடத்த வேண்டும்.
ஏற்கனவே ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இதனைப் பார்க்கின்றேன்.
பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி
வெறுமனே இன நல்லிணக்கம் என்ற போர்வையில் கூட்டத்தை நடத்தினால் நான் அதில் கலந்துகொள்வேனோ தெரியவில்லை. பெரும்பாலும் கலந்துகொள்ளாமல் இருப்பேன். ஆனாலும் இறுதி முடிவு எடுக்கவில்லை” – என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வ கட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.