ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள் என்கிறது புராணம். ஆடித் தபசு என்ற பெயரில் சிவாலயங்களில் விழாக்கள் நடப்பதே இதற்கு சான்று. ஆடி என்றவுடன் நம் நினைவிற்கு வருகின்ற வேடிக்கையான நிகழ்வு புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்பது. அதுவும் பெண் வீட்டார் சீர்வரிசைகளை வைத்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் செல்லவேண்டும் என்ற எழுதப்படாத விதியும் நடைமுறையில் உள்ளது. ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும், அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று விளக்கமும் சொல்லப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள் என்கிறது புராணம். ஆடித் தபசு என்ற பெயரில் சிவாலயங்களில் விழாக்கள் நடப்பதே இதற்கு சான்று. ஏதேனும் அற்ப விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினை உண்டானாலும் மனைவியானவள் கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும், கணவனும் மனைவியின் மனநிலை புரிந்து கருத்து வேறுபாட்டினை மறந்து தன் இல்லாளை நாடிச் செல்ல வேண்டும் என்பதே புராணங்கள் நமக்குச் சொல்லும் கருத்து. புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயானவள் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும், மணப்பெண், இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் சென்றனர்.
திருமணத்திற்கு முன்னரே இவற்றையெல்லாம் சொல்லித் தந்தால் விளையாட்டுப் பருவத்தில் இருக்கும் பெண்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களா? திருமணம் முடிந்து இல்லத்தரசியான பின்னர்தானே பொறுப்பு வரும்? இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல; காலமெல்லாம் இணைபிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக! கணவன் நலனே தன் நலன் என மனைவியும், மனைவியின் துணையே தன் பலம் எனக் கணவனும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் ஆடி மாதத்தில் பிறந்த வீட்டிற்குச் செல்லும் பெண்ணை வைத்து வேடிக்கையாக சித்தரிக்கும் கருத்துகளை ரசித்துக் கொண்டிருக்கிறோம்.