கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் வேப்பிலை தோரணத்தை காணலாம். ஆடியில் சூறைக்காற்று வீசுகிறது. ஆடி என்றவுடன் முதலில் நம் நினைவிற்கு வருவது அம்மன் கோவிலும், வேப்பிலையும்தான். சாகை வார்த்தல், கூழ் ஊற்றுதல் என அனைத்து அம்மன் ஆலயங்களிலும் கூட்டம் அலைமோதும். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் வேப்பிலை தோரணத்தையும் காணலாம்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் தானா, மற்ற தெய்வங்கள் இல்லையா? எல்லா மாதங்களிலும்தான் வெள்ளிக்கிழமை வருகிறது; அதென்ன ஆடிவெள்ளிக்கு மாத்திரம் அத்தனை மகத்துவம் என்ற சந்தேகமும் நம் மனதில் தோன்றுகிறது.
இந்த சந்தேகத்திற்கு ஜோதிடவியல் ரீதியான விளக்கத்தை காண்போம். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆடி மாதத்திற்கு கடக மாதம் என்று பெயர். அதாவது, தகப்பனைக் குறிக்கும் சூரியன், தாயாரைக் குறிக்கும் சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் இணையும் மாதம் இது. சூரியனின் பிரத்யதிதேவதை, பசுபதி எனப்படும் ஈஸ்வரன்.
சந்திரனின் பிரத்யதிதேவதை, கௌரி எனப்படும் அம்பிகை. இறைவன் அம்பிகையின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம். அதாவது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலமிது என்பதால் சக்தி மிகவும் மகத்துவம் பெறுகிறாள். புராணங்களிலும் பார்வதி தேவி தவமிருந்து இறைவனோடு இணைந்த காலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆடித் தபசு என்ற பெயரில் புகழ்பெற்ற சிவாலயங்களில் திருவிழா நடக்கக் காண்கிறோம். சக்தியோடு சிவம் இணைவதன் வெளிப்பாடாக ஆடியில் சூறைக்காற்று வீசுகிறது. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கிறது. இறைவன் அம்பிகையோடு இணைந்துவிட்டதால் அம்பிகையை வணங்கினாலே இறைவனையும் சேர்த்து வணங்கியதாகிறது. இதனாலேயே ஆடிமாதம் என்பது அம்பிகைக்கு உரிய மாதமாக நம்மால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.