வட கொரியா மீண்டும் இரண்டு ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரிய இரணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு ஏவுகணைகளும் நேற்றையதினம் (25.07.2023) வீசப்பட்டுள்ளன. இது குறித்து தென் கொரிய ராணுவம் மேலும் கூறியதாவது,
வட கொரியாவின் தலைநகா் பகுதியிலிருந்து 2 ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகள் நேற்று ஏவப்பட்டன. அந்த இரு ஏவுகணைகளும் சுமாா் 400 கி.மீ. பாய்ந்து சென்று கடலில் விழுந்தன என தெரிவித்துள்ளது.
போா் தொடுப்பதற்கான ஒத்திகை
1950-1953ஆம் ஆண்டின் கொரிய போருக்குப் பிறகு அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து அவ்வப்போது கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இது, தங்களது நாட்டின் மீது போா் தொடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது.
அத்தகைய பயிற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைகளை வீசி சோதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தென் கொரிய கடல் பகுதியில் அணு ஆயுதம் ஏந்திய நீா்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அண்மையில் நிறுத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.