எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா இலங்கசிங்ஹ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டால் ஆகஸ்ட் மாத முற்பகுதியிலிருந்து நீர்கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நீர் கட்டண அதிகரிப்பு வீதம் தொடர்பில் இதுவரையிலும் எவ்விதமாக தீர்மானமும் எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை அனுமதி
இதேவேளை நீர் மற்றும் வடிகாலமைப்புக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை கருத்தில் கொண்டு குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது நீர் விநியோகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்புக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நீர் மற்றும் வடிகாலமைப்புக் கட்டணங்களைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிலையில் பொது மக்கள் தங்களது மாதாந்த நீர்க் கட்டணத்தை எதிர்வரும் நாட்களில் நீர்மானி வாசிப்பாளரிடம் பணப்பரிமாற்றம் அல்லது கடன் அட்டைகளை பயன்படுத்தி செலுத்துவதற்குரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் வீடுகளுக்கு மாதாந்தம் வருகை தரும் நீர்மானி வாசிப்பாளரிடம் நீர்க் கட்டணத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவே அட்டைகளை பயன்படுத்தி செலுத்தும் வசதிகளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, பொது மக்களின் சிரமங்களை தவிர்த்து கட்டணத்தை இலகுவாக செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.