வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இஷான் கிஷன் அரை சதமடித்து 52 ரன்கள் எடுத்தார். வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பேசியதாவது: அணி நிர்வாகம் முதலில் பந்து வீசி பெரிய இலக்கை பின்னால் துரத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளம் மோசமாக மாறியது.
வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என மூவருக்குமே ஆடுகளம் சாதகமாகதான் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை இவ்வளவு குறைந்த ரன்களில் நாங்கள் சுருட்டுவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு பல வீரர்கள் திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தோம்.
114 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டியது என்பது எங்களுடைய பந்துவீச்சாளர்களின் சிறப்பாக செயல்பாட்டை காட்டியது. உலக கோப்பை தொடருக்கு முன்பு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என நினைத்தோம். நான் என்னுடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தான் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்கினேன்.
அதன் பிறகு இப்போதுதான் அந்த இடத்தில் விளையாடினேன். முகேஷ் குமார் முதல் போட்டியில் நன்றாகவே பந்து வீசினார். டெஸ்ட் போட்டியிலும் அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். இசான் கிஷனுடைய பேட்டிங்கும் நல்ல முறையில் இருந்தது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்தான் என தெரிவித்தார்.