இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்சில் 188 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்டானது.
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார். அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்தது. அப்துல்லா ஷ்பீக் 201 ரன்னும், ஆகா சல்மான் 132 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை சார்பில் அசிதா பெர்ணாண்டோ 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 576 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 410 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் இலங்கை அணி திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூல ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 என கைப்பற்றியது. பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 7 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக அப்துல்லா ஷபீக்கும், தொடர் நாயகனாக ஆகா சல்மானும் தேர்வாகினர்.