புத்தளம் உடப்புவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் பட்டதாரி ஆசிரியர் ஒருவரின் கைப்பையில் இருந்து இருபத்தி இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான 13 பவுண் தங்க நாணயத்தை திருடிய குற்றச்சாட்டில் அதே பாடசாலையில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடப்புவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இருபத்தேழு வயதுடைய தொண்டர் ஆசிரியர் என தெரிவிக்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய தொண்டர் ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதைக்கப்பட்ட தங்க நாணயம் மீட்பு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலின் பிரகாரம், பாடசாலையின் எல்லை வேலியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்த தங்கக் நாணயத்தை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியை அணிந்திருக்கும் இந்த தங்க நாணயத்தை அறைக்கு வந்தவுடன் கழற்றி கைப்பையில் வைப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. கடந்த 25ஆம் திகதி பட்டதாரி ஆசிரியை தனது கைப்பையில் தங்கநாணயத்தை வழமையாகக் கழட்டி வைத்துவிட்டு பாடம் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையில் முறைப்பாடு
குறித்த நாணயம் இல்லாததைக் கண்டு காவல்துறையில் முறைப்பாடு செய்யவிருந்த போது முறைப்பாடு செய்வதன் மூலம் பாடசாலைக்கு அவப்பெயர் ஏற்படும் எனக் கூறி காவல்துறைக்கு செல்லவேண்டாம் என சந்தேக நபர் கேட்டுள்ளதாக தெரியவருகின்றது.