கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்த நிதிக்குற்றச்சாட்டு வழக்கில் சந்தேகநபராக உள்ள திலினி பிரியமாலி, தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கோரி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது திலினி பிரியமாலி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
கோரிக்கை நிராகரிப்பு
இதன்போது சந்தேகநபருக்கு எதிரான மூன்று வழக்குகள் திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
மேலும், சந்தேகநபரை எதிர்வரும் 02 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட பிரிவில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் திட்ட முதலீட்டிற்காக குறித்த பெண் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நிலையில்,அரசாங்கத்தின்பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களிடம் இருந்து பல கோடி ரூபாவிற்கும் அதிகமாக நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய திலினி பிரியமாலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.