தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு தமது கணீர் குரலால் உத்வேகம் கொடுத்த ஈழத்தின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (திங்கட்கிழமை) காலை மாங்குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக கிசிச்சை பெற்று வந்த சாந்தன் நேற்று பிற்பகல் உயிரிழந்தார். அன்னாரின் பூதவுடன் இன்று காலை வரை யாழ்.ஓட்டுமடத்தில் உள்ள அந்தியகால சேவை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள் என பெருந்திரளானோர் இரவு முழுவதும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
தற்போது அவரது பூதவுடன் மாங்குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்தோடு, இன்று மாலை கிளிநொச்சியிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, நாளைய தினம் இறுதி அஞ்சலி இடம்பெறவுள்ளது.
இலங்கை மட்டுமன்றி புலம்பெயர் தேசங்களிலும் தனக்னெ தனி முத்திரை பதித்துக்கொண்ட இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத அதேவேளை, இசையுலகத்தில் ஈடுசெய்ய முடியாத பேரிடைவெளியை ஏற்படுத்திச் சென்றுள்ளார் சாந்தன்.