சார்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃபைண்டர்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது. இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ஃபைண்டர்’. இவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். அரபி புரொடக்ஷன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சூர்ய பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்த விழாவிற்கு வந்த தயாரிப்பாளர் குஞ்சு மோகனுக்கு நன்றி, சார்லி மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது அன்பான வணக்கம், சினிமாவின் முதல் ரசிகனும் நான்தான், கடைசி உழைப்பாளியும் நான்தான். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும் இல்லை அது ஒரு பல்கலைகழகம், நாம் அங்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இயக்குனரும் இசையமைப்பாளரும் என் வீட்டிற்கு வந்தனர். அவர்களை உற்று கவனித்தேன் அவர்கள் கதை சொல்ல மட்டும் வந்தவர்கள் அல்ல சரித்திரம் படைக்க வந்தவர்கள்.
நான் புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களை பார்ப்பதில்லை அவர்களது உழைப்பை தான் பார்ப்பேன், இவர்களது உழைப்பு அருமையாக இருந்தது. தயாரிப்பாளர் சுப்ரமணியனுக்கு எனது வாழ்த்துகள் இன்று சினிமாவில் தயாரிப்பாளர்கள் கண்டு பிடிப்பது அரிது. இந்த தயாரிப்பாளருக்கு எந்த அய்யமும் இல்லை படத்தை நன்றாக தயாரித்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். இந்தப் படத்தில் பாடல்கள் கதையை சொல்லவில்லை படத்தில் வரும் ஒரு நிகழ்வை சொல்லுமாறு அமைந்துள்ளது. சினிமாவில் குறை சொல்வது எளிது ஆனால் நிறை காண்பது அரிது, அதனால் யாரும் எழுதட்டும் யாரும் பாடட்டும் அதில் யாரும் நடிக்கட்டும் ஆனால் தமிழை நன்கு அறிந்து விட்டு அதை செய்யட்டும். இதைத்தான் நான் வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறேன்.
இந்த படத்திற்கு தமிழில் தலைப்பை வைக்க வேண்டுமென்று கேட்டேன் ஆனால் படக்குழுவினர் வியாபாரத்தில் அது பிரச்சினை ஏற்படுத்துகிறது என்றனர். தமிழுக்கு அது தவறு என்றாலும் தயாரிப்பாளர் தமிழன் என்பதால் இதை நான் ஒப்புக் கொண்டேன். சார்லி ஒரு கெட்டிகார நல்லவன். நாற்பது வருடம் இந்த சினிமாவில் இருந்து வருகிறான். அவனது கலை மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் அனைவரையும் நான் சந்திப்பேன். படக்குழு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி என்று பேசினார்.