டக்ளஸ் தேவானந்தவின் அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியேட்டரின் மின்சார கட்டண நிலுவை 85 இலட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபாவினை செலுத்துமாறு அறுவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ். மாவட்ட பணிப்பாளர் ஞானகணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஈ.பீ.டீ.பியினரின் அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியேட்டருக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் மின் விநியோகம் இடம்பெறுகின்றது. இவ்வாறு விநியோகம் இடம்பெறும் நாள் முதல் இன்று வரையில் மின்சாரக் கட்டண நிலுவையாக ரூபா 85 இலட்சத்து 50 ஆயிரத்து 982 மற்றும் 75 சதம் உள்ளது. அவ்வாறு கானப்படும் நிலுவை தொடர்பில் உடன் கவனம் செலுத்தி உரிய பணத்தினை செலுத்துமாறும் தற்போது எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகை, மிகப் பாரிய நிலுவையாகக் காணப்படுகின்ற போதிலும் குறித்த பாவனையாளர் முன்னாள் அமைச்சராகவும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளமையால் எம்மால் அடுத்த கட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள முடியவில்லை. இதனாலேயே எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலக பணியாளர்கள் இ.மி.சபைக்கு வருகை தந்து இறுதி மீதி தொடர்பிலும் உறுதிப்படுத்தி சென்றுள்ளனர்.
இவ்வாறு உறுதிப்படுத்திச் சென்றபோதும் எந்தவிதமான கொடுப்பனவுகளும் செலுத்தப்படாத நிலையில், குறித்த நிலுவைப் பணம் அப்படியே உள்ளது. ஆயினும் குறித்த கட்டணத்தை அறவிடுவது தொடர்பான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை ஈடுபட்டு வருகின்றோம் என, இலங்கை மின்சார சபையின் யாழ். மாவட்ட பணிப்பாளர் ஞானகணேசன் தெரிவித்தார்.