இயேசுவின் சோதனை பற்றிய பாடம் எந்த இலக்கியப் பாணியில் அமைக்கப்பட்டது என்பது குறித்து ஒரு விவாதம் உள்ளது. அதாவது, இயேசு சோதிக்கப்பட்டார் என்று நற்செய்தி நூல்கள் கூறுவது வரலாற்று நிகழ்ச்சியா, உவமையா, தொன்மமா அல்லது பல இலக்கியப் பாணிகளின் தொகுப்பா? நற்செய்தி நூல்கள் விவரிப்பது போலவே, உண்மையாகவே இயேசுவின் சோதனை நிகழ்ந்ததா என்னும் கேள்வியே இந்த விவாதத்தின் மையத்தில் உள்ளது.
எடுத்துக்காட்டாக, 19ஆம் நூற்றாண்டு ஆய்வாளரான ஆண்ட்ரூ மார்ட்டின் ஃபெய்ர்பெய்ர்ன் என்பவர் இப்பொருளை ஏற்கனவே ஆய்ந்தார். இயேசு சோதனைகளைச் சந்தித்தபோது அலகை நேரடியாக அவருடைய முன்னிலையில் வந்து நின்று பேசியதா? அவரை உயரமான ஒரு மலைக்குக் கூட்டிச் சென்றதா? இயேசுவுக்கு அலகைக்கும் இடையே நிகழ்ந்ததாக நற்செய்தி நூல்கள் கூறுகின்ற உரையாடல் உண்மையாகவே நடந்ததா? அலகை விவிலியத்தை மேற்கோள் காட்டி இயேசுவுக்குச் சவால் விடுத்ததா? அல்லது, இந்நிகழ்ச்சியின் வழியாக, எல்லா மனிதரும் சந்திக்கின்ற சோதனைகள் கதையாக எடுத்துக் கூறப்பட்டனவா? இத்தகைய கேள்விகளை ஃபெய்ர்பெர்ன் ஆய்வு செய்தார்.
இயேசு தம்முடைய பணிக்காலத்தின்போது உவமைகள் வழியாக மக்களுக்குக் கடவுளின் ஆட்சி பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார். அப்போது தமது உள்ளத்தின் ஆழத்தில் தாம் சந்தித்த சோதனைகளை, உள் அனுபவங்களை அவர் மக்களோடு பகிர்ந்துகொள்வதற்காக, தாம் சோதனைகள் மீது வெற்றிகொண்டதை ஓர் உவமையாக, கதையாக எடுத்துக் கூறியிருக்கலாம். இவ்வாறு வில்லியம் ஈவன்ஸ் போன்றோர் கருதுகின்றனர்.
மேலும், இயேசு கூறிய உவமைகளுள் லூக்கா 14:28-30 பகுதியில் இரண்டு உவமைகள் இணைந்து வருகின்றன. ஒரு மனிதன் ஒரு கோபுரம் கட்ட விரும்புகின்றான். அதை அரைகுறையாகக் கட்டிவிட்டு அவன் முடிக்க இயலாமல் விட்டுவிட்டால் எல்லாரும் அவனைப் பார்த்து நகைப்பார்கள். அதுபோலவே, ஓர் அரசன் தகுந்த தயாரிப்பின்றி மற்றோர் அரசனை எதிர்த்துச் சென்று, தோல்வியுற்றால் அதுவும் நகைப்புக்குரியதே.
இந்த உவமைகள் வழியாக இயேசு “செய்வன திருந்தச் செய்” என்னும் பாடத்தையும், ஆர அமர சிந்திக்காமல் அவசரப்படாலாகாது எனவும் அறிவுறுத்துகிறார். இயேசுவுக்கு நிகழ்ந்தனவாகக் கூறப்படுகின்ற சோதனைகளும் இந்தப் பாடத்தைப் புகட்ட இயேசுவால் கூறப்பட்ட உவமைகளா என்று ஹென்றி காட்பரி போன்ற அறிஞர் கருதுகின்றனர். இயேசுவின் மெசியாப் பணியானது கடவுளின் திட்டப்படி நிகழுமே ஒழிய இயேசுவின் சுய விருப்பத்துக்கு ஏற்ப நிகழாது என்பதையும் இயேசு “சோதனை என்னும் உவமை” வழியாக உணர்த்தியதாகக் கருதலாம்.
வில்லியம் பார்க்லே என்னும் விவிலிய அறிஞர் கீழ்வருமாறு கூறுகிறார்: “இயேசு சந்தித்த சோதனைகளுள் ஒன்று, அலகை இயேசுவை மிக உயர்ந்த ஒரு மலை உச்சிக்குக் கொண்டு சென்றதாகவும், உலக அரசுகள் அனைத்தையும் அவருக்குக் காட்டி, அவற்றை அவருக்குக் கொடுப்பதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் அனைத்தையும் பார்க்கக் கூடிய அளவில் உயர்ந்த மலை பாலத்தீன நாட்டில் கிடையாது. எனவே, இச்சோதனை நற்செய்தி நூல்கள் கூறுவதுபோல அப்படியே எழுத்துக்கு எழுத்து உண்மை என்று சொல்ல முடியாது. இயேசுவின் உள்ளத்து அளவிலும் உணர்வு அளவிலும் என்ன அனுபவங்களை அவர் பெற்றார் என்பதே இயேசுவின் சோதனைகள் வழியாகக் கூறப்படுகின்றது”. சோதனையில் வருகின்ற அலகை பற்றிய விவரங்களையும் எழுத்துக்கு எழுத்து உண்மையாகக் கொள்ள முடியாது.
இவ்வாறு, இயேசு சந்தித்த சோதனைகள் ஒன்றில் அவருடைய உள் அனுபவத்தை வெளிக்கொணர்கின்றன அல்லது உவமையாக, கதையாக இயேசுவால் எடுத்துக் கூறப்படுகின்ற ஓர் உண்மையை உள்ளடக்கி இருக்கின்றன என்றும், எழுத்துக்கு எழுத்து அப்படியே நடந்த நிகழ்ச்சியைக் குறிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் 18ஆம் நூற்றாண்டிலிருந்தே முன்வைக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.