ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகளையும் ஐசிசி குறைத்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அபராதத் தொகை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அபராதப் புள்ளிகளை ஐசிசி விதித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 100 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடம் வகிக்கிறது.
இந்தியா 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 30 சதவீத புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 15 சதவீத புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில், ஐ.சி.சி.யின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்டில் இரு நாட்கள் பெய்த மழை காரணமாக 2-வது இன்னிங்சில் எங்களுக்கு பந்துவீச கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அப்படி இருந்தும் ஐ.சி.சி. பந்துவீச்சில் தாமதம் செய்ததாகக் கூறி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து 10 புள்ளிகளை எங்களிடம் இருந்து பறித்துள்ளது. இது எப்படி நியாயமானது என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.