ராகுல் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. இதேபோல ஸ்ரேயாஸ் அய்யரும் அணிக்கு உடனடியாக திரும்ப இயலாது. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். ஐ.பி.எல். போட்டியின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக ராகுல் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை.
கே.எல்.ராகுல் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். அவரது உடல் தகுதியை அங்குள்ள குழு பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டியிலும் ராகுல் விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு அவருக்கும் இன்னும் அதிகமான நேரம் தேவைப்படுகிறது.
இதேபோல ஸ்ரேயாஸ் அய்யரும் அணிக்கு உடனடியாக திரும்ப இயலாது. முதுகு பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக அவர் ஆபரேசன் செய்து கொண்டார். அவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் உள்ளார். இரு வரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவ குழு தொடர்ந்து பரிசோதித்து வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது முக்கியமானது. இதனால் இருவரையும் அவசரமாக விளையாட வைக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருவரும் விளையாடலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி ஆகஸ்ட் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது.