தலவத்துகொடையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் லிப்ட் திடீரென பழுதடைந்ததால், அதில் பயணம் செய்த சுமார் 10 பேர் சிக்கி உயிர் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
லிப்ட்க்குள் சிக்கியிருந்தவர்கள் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வெளியேற முடியாமல் போயுள்ளதுடன் தங்கள் உயிரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர்.
இறுதியில், காப்பாற்றும் முயற்சியின் நடுவில் லிப்ட் இடிந்து விழுந்தது, ஆனால் அதிர்ஷ்டவசமாக லிப்டில் இருந்தவர்கள் குலுங்கியதால் அதிர்ச்சிக்குள்ளாகிய போதிலும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
ஹோட்டல் நிர்வாகம்
லிப்ட் பராமரிப்பு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக லிப்டில் இருந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், அங்கு அதிகமானோர் பயணம் செய்ததால் இது நடந்ததாக ஹோட்டல் நிர்வாகம் கூறுகிறது.
மின்சார மணி அடித்ததாக ஹோட்டல் நிர்வாக அதிகாரிகள் கூறிய போதிலும் மணி அடிக்கவில்லை என லிப்டில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.
இனிமேலாவது இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படாமல் இருக்க ஹோட்டல் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
திருமண நிகழ்வுகள்
இந்த ஹோட்டலில் நேற்று இரண்டு திருமண நிகழ்வுகள் நடந்தன. அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் லிப்ட்டில் சென்றதாக கூறப்படுகிறது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த லிப்ட் செயலிழந்ததாகவும், அது கீழே விழவில்லை எனவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.