இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிப்பொது முகாமையாளர் ஒருவர் பெருந்தொகை பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தகப்பிரிவின் சம்மந்தப்பட்ட அதிகாரி மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தின் பல உயர் அதிகாரிகள் மீது பல்வேறு எரிபொருள் பீப்பாய்கள் மாயமானமை தொடர்பில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாயமான எரிபொருளின் பெறுமதி சுமார் 900 கோடி ரூபா எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உயர் அதிகாரிகளுக்கு கடும் சிக்கல்
இவ்வாறு மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி அடுத்த வருடம் ஓய்வு பெறவுள்ளதாகவும், அவர் அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அவர் கனடா சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி மற்றும் சிலர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களில் இருந்து ஆயிரக்கணக்கான பீப்பாய்கள் எரிபொருளை வெளியேற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், கூட்டுத்தாபனம் நடத்திய உள்ளக விசாரணையில் உறுதியற்ற தன்மை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த எரிபொருள் மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரையும் அணுகியுள்ளதோடு, எதிர்காலத்தில் பெட்ரோலியக் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் பலரிடமும் திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.