இறக்குமதி தடை தொடர்பில் புதிய அறிவிப்பொன்றை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.
அதன்படி மேலும் 300 பொருட்களின் இறக்குமதி தடைகளை தளர்த்த தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருட்களுக்கான இறக்குமதி தடை விதிப்பு
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் சில பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி சுமார் 1465 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில் தற்போது பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடைகள் நீக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாகன இறக்குமதி
என்ற போதும் வாகன இறக்குமதி குறித்த சாதகமான கருத்துக்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை.
இதேவேளை வாகனங்களை மீண்டும் எப்போது இறக்குமதி செய்ய முடியும் என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கமும் அண்மையில் குறிப்பிட்டிருந்தது.
அத்துடன், வாகன இறக்குமதியின் போது நாட்டுக்கு பொருத்தமற்ற வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் பெருமளவிலான வெளிநாட்டு பணம் நாட்டை விட்டு வெளியேறியதாக சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சி சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.