அறிமுக வீரர் திலக் வர்மாவின் பேட்டிங்கை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஆட்டம், இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நேற்று தரோபாவில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாவெல் 48 ரன்னும், பூரன் 41 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அறிமுக வீரரான திலக் வர்மா 39 ரன்கள் எடுத்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
இலக்கை நோக்கி விளையாடியதில் நாங்கள் சரியான திசையில் இருந்தோம். சில தவறுகளை செய்து விட்டோம். ஆனால் அது பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் இது இளம் வீரர்களை கொண்ட அணி. அவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த ஆட்டம் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தால் சேசிங் செய்வது மிகவும் கடினமாகிவிடும். நாங்கள் பேட்டிங் செய்யும் போது தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் தோல்வி ஏற்பட்டது.
ஆடுகளம் சூழலுக்கு ஏற்ப மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்தோம். மேலும் சாகலும், குல்தீப் யாதவும் இணைந்து விளையாட வேண்டும் என்று விரும்பினோம். அக்சர்பட்டேலை பேட்டிங்கிலும் கொண்டு வந்து இருந்தோம். முகேஷ் குமாருக்கு இந்த இரண்டு வாரங்கள், அவரது வாழ்க்கையில் சிறப்பானது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி உள்ளார்.
அறிமுக வீரர் திலக் வர்மாவின் பேட்டிங்கை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஆட்டம், இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை மறுநாள் கயானாவில் நடக்கிறது.