அதிர்ஷ்டலாப சீட்டில் ஏழரை கோடி ரூபா பணப்பரிசு பெற்ற நபரை கடத்தி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நபரை கடத்தி சென்ற குழுவொன்றை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை குற்றப் புலனாய்வு பிரிவினர் இணைந்து கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட நபரை அவர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளனர்.
பணப் பரிசை வெற்றி பெற்ற, அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கடத்தப்பட்டு கம்பளையில் உள்ள வீடொன்றில் பத்து நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
10 பேர் சேர்ந்து சித்திரவதை செய்தனர்
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில்,”கடந்த மாதம் 27ஆம் திகதி தம்புள்ளையில் வைத்து என்னை காரில் கடத்தினார்கள். பின்னர் வீடொன்றில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கினார்கள்.
கழிவறைக்கு செல்லும் போதும் இரண்டு பக்கமும் இரண்டு பேர் வருவார்கள். இவ்வாறு சுமார் 10 பேர் சேர்ந்து என்னை சித்திரவதை செய்தார்கள்.
அதிர்ஷ்டலாப சீட்டில் வெற்றி பெற்ற பணம் எங்கே இருக்கிறது என்பதை காண்பிக்க சொன்னார்கள்.
குருநாகலைச் சேர்ந்த ஒரு கந்துவட்டிக்காரன் வந்து, இருபத்தி இரண்டு கோடி கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டான்.”என தெரிவித்துள்ளார்.
மேலும் கடத்தல் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.