இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவுக்கு நான் அர்ப்பணிக்கிறேன். அதற்காகத்தான் வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று கயானாவில் நடந்தது. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், ஒருபுறம் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதவு செய்தார். அவர் 41 பந்துகளில் ஒரு சிக்சர் 5 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் இந்தியா 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அரைசதம் மற்றும் சதம் அடித்தால் வீரர்கள் அவர்களுக்கு என்று ஒரு பாணியை வைத்துள்ளனர். ஜடேஜா என்றால் பேட்டை சுழற்றி காட்டுவார். கேஎல் ராகுல் காதை மூடிக்கொள்வார். இப்படி இருக்க திலக் வர்மாவும் தனக்கென ஒரு பாணியை கொண்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் திலக் வர்மா இரு கட்டை விரல்களையும் மாற்றி மாற்றி காண்பித்து குழந்தையை போல் கொண்டாடினார். இது குறித்து திலக் வர்மா கூறியிருப்பதாவது:- இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவுக்கு நான் அர்ப்பணிக்கிறேன். அதற்காகத்தான் வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். ஆதலால், நான் எனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எப்போது அரைசதம் அடிக்கிறேனோ அதனை சமைராவுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லியிருந்தேன். அதன்படியே செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.