மின் கட்டணங்கள் மீண்டும் திருத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் விலை ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படும். எனவும், திட்டமிடப்பட்ட மின்சார வெட்டுக்கள் இன்றி ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்சார கட்டணத்தை உடனடியாக மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை அண்மையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தது.
மின்சார சபையின் அறிவிப்பு
மின்சார வாரிய பொது மேலாளர் ஜி.ஏ.டி.ஆர்.பி. செனவிரத்ன கடந்த 21ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் செலவுகளை ஈடுகட்ட முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
இவர்களின் வருமானத்தை மூவாயிரத்து முன்னூறு கோடி ரூபாவால் அதிகரிக்கும் வகையில் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி 66 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் கடந்த 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் 25 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.