வர்த்தக அடிப்படையிலான பணமோசடி அச்சுறுத்தலை தடுக்க ஏனைய நாடுகளில் செயற்படும் ஒத்த நிறுவனங்களுடன் இலங்கையின் சுங்கத்திணைக்களம் உடன்படிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தகவல் பரிமாற்றம், பணமோசடி செய்பவர்களைக் கண்டறிதல் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றைக் கண்டறிய இலங்கை சுங்கத்திணைக்களம், அண்மையில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக அடிப்படையிலான பணமோசடி
TBML பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்படும் இந்த உடன்படிக்கை, அதிக விலைப்பட்டியல் அல்லது குறைவான விலைப்பட்டியல் பொருட்கள், சுங்க வரிகளைத் தவிர்ப்பதற்காக பொருட்களை தவறாக வகைப்படுத்துதல் மற்றும் தவறான கப்பல் ஆவணங்களைப் பயன்படுத்துதல் என்பனவாகும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக அடிப்படையிலான பணமோசடிகளை கண்டறியும் ஒப்பந்தம் சமீபத்தில் அவுஸ்திரேலியாவுடன் கையெழுத்தான நிலையில்,மாலைத்தீவு மற்றும் ரஷ்யாவுடனும் இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் அதிரடிப் படையினர் சோதனை
இந்த தகவல் பகிர்வு மற்றும் கண்டறிதல் தொடர்பில், இங்கிலாந்து, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இதேவேளை சுங்கத்திணைக்களத்தின் சிறப்பு வருவாய் அதிரடிப் படையினர் நடத்திய சோதனையில் இருந்து கடந்த 6 மாதங்களில் 1.1 பில்லியன் ரூபாய்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் 2022 ஆம் ஆண்டு முழுவதும் 1.1 பில்லியன் ரூபாய்கள் மாத்திரமே வருமானமாக சேகரிக்கப்பட்டதாகவும் சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.