மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆரம்பம் முதலே சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா மரணம், சிகிச்சை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த போது சசிகலா தரப்புக்கு ஆதரவாக பல விளக்கங்களை அளித்து வந்தார் தீபக்.
இந்நிலையில் திடீரென சில தினங்களுக்கு முன்னர் தீபக் சசிகலா குடும்பத்தை எதிர்த்தும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும் எனவும் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என அவருக்கு ஆதரவாக பேசினார்.
தீபக்கின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியாமல் பலரும் குழம்பி வருகின்றனர்.
மேலும், தீபக்கின் இந்த முடிவுக்கு மூன்று காரணங்கள் கூறப்படுகிறது.
1. தனது பாட்டியும், அத்தை ஜெயலலிதாவும் பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் சசிகலா குடும்பம் நடத்தும் ராஜ்யம் தீபக்கிற்கு புடிக்கவில்லை.
2. கட்சியில் இளைஞர் பாசறை பதவி கேட்டு வந்துள்ளார் தீபக், அவருக்கு வழங்குவது போல் பேசி வந்த சசிகலா குடும்பத்தினர் இதுவரை எந்த பதவியும் தராதது தீபக்கிற்கு கோபம்.
3. ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னை வேட்பாளராக அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து வந்துள்ளார் தீபக்.
ஆனால் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் பற்றிய கேள்விக்கு பரிசீலிப்போம் எனக் கூறியதை தீபக்கால் சகித்துக்கொள்ளமுடியவில்லை.
இப்படி தனக்கான எந்த உரிமையும் சசிகலா தரப்பில் இருந்து கிடைக்காத விரக்தியில் தான் தீபக் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.