அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சந்தேக நபரான ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார் .
குறித்த வழக்கு நேற்றைய தினம் சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் ரி. கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பிரதான சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும், குற்றத்தை மறைக்க முயன்ற பாடசாலை அதிபரை தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.
குறித்த ஆசிரியர் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி விளையாட்டு அறையில் வைத்து தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்து கடந்த 2 ஆம் திகதி அம்மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தலைமைறைவாகி இருந்த ஆசிரியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) மாலை தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்த நிலையில் அவரை நிந்தவூர் பொலிஸார் திங்கட்கிழமை (07) சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன் இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.