அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் பதவியேற்ற பின்னர் வெள்ளைமாளிகையில் பணியில் இருந்த இஸ்லாமிய பெண் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியான பின்பு டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகள் மற்றும் மாற்றங்கள் என நிறைய செயல்படுத்தி வருகிறார். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் யாருக்கேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இதனால் பலரும் டிரம்ப் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் டிரம்போ தான் செய்யும் ஒவ்வொரு விடயமும் தம் நாட்டின் நலனுக்காகவே, இதை ஊடகங்கள் தவறாக சித்தரிப்பதாக புகார் கூறினார், இதில் ஒரு சில ஊடகங்களை நேரடியாகவே தாக்கினார்.
இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ருமானா அகமது என்ற பெண் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் வங்கதேசத்தைச் சேர்ந்த வம்சாவளி இஸ்லாமிய பெண் ஆவார்.
இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒபாமா அரசு நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ருமானா பணியின் போது தலையில் ஹிஜாப் அணிந்து இருப்பார் என்று கூறப்படுகிறது.
புதிய ஜனாதிபதியான டிரம்ப் ஈராக், ஈரான், சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளுக்கு விசா தடை விதித்தார். தற்போது ருமானா திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ருமானா கூறுகையில், விசா தடை விதித்த 8 நாட்களில் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், ஆனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றவுடன் தனது நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது செய்து வருகிறார். அது போன்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு புதிய தலைவர் மற்றும் உதவியாளர்கள், நியமிக்கப்பட்டனர். இந்த அடிப்படையில் தான் ருமானா பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.